×

விவசாயியை எட்டி உதைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

விருதுநகர்: விவசாயியை எட்டி உதைக்கப்பட்ட விவகாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அம்மையப்பன் என்ற விவசாயி, அந்த பகுதியில் உள்ள அடிப்பட்டை பிர்சனைகள் குறித்து பேசியுள்ளார்.

இதனால் அவருக்கும் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் என்பவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்மையப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தங்கபாண்டியன் தலைமறைவானார். இந்த வழக்கு தொடர்பாக அம்மையப்பனை தாக்கியதாக ஊராட்சி செயலாளரின் ஆதரவாளர் ராசுவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஊராட்சி செயலர் தங்க பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், விவசாயி எட்டி உதைக்கப்பட்ட விவகாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கிராம சபை கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்காதது மற்றும் விவசாயி தாக்கப்பட்ட சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை ஊராட்சி செயலாளர் எட்டி உதைத்த விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

The post விவசாயியை எட்டி உதைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Virudunagar ,Srivillibutur ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...